காசிலிங்கபுரத்தில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமானது, விழிப்புணர்வு சுவர் ஓவியம் வரைதலுடன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கருங்குளம் யூனியனுக்குட்பட்ட காசிலிங்கபுரத்தில் வரும் 26ம்தேதி வரை நடக்கிறது.

முகாமின் முதல் நாளான கடந்த 20ம்தேதி நாட்டுநலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்கள் கிராமத்திலுள்ள வீடுகள் தோறும் சென்று மக்களை சந்தித்து நாட்டு நலப்பணித்திட்ட முகாம் குறித்து அறிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, உதவி பேராசிரியர் காளிராஜன் தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவியர்கள் கிராம வளங்கள் குறித்து கள ஆய்வு மூலமாக கிராமப்புற மதிப்பீடு பணி மேற்கொண்டனர்.
தொடர்ந்து, காசிலிங்கபுரம் உயர்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பொதுச்சுவர்களில் பொதுமக்களிடத்தில் சுத்தம் – சுகாதாரம், சிறுசேமிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு சுவர் விளம்பரங்களை வரைந்து அசத்தினர்.

தொடர்ந்து, நாட்டுநலப்பணித்திட்ட முகாம் தொடக்க விழா இன்று (திங்கட்கிழமை) காலை காசிலிங்கபுரத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமுடன் கோலகாலமாக நடைபெற்றது.
தொடக்க விழாவிற்கு, டி.வி.எஸ் அறக்கட்டளை மண்டல இயக்குநர் விஜயகுமார் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர்கள் ரமேஷ், புவனேஸ்வரி ஆகியோர் வரவேற்றனர்.
முகாமில், பனை மற்றும் வாழை ஆராய்ச்சி நிலைய சிறப்பு அலுவலர் சுவர்ணபிரியா, உழவியல் துறை பேராசிரியர் ஹேமலதா, மரபியல்-தாவர இனப்பெருக்க துறை பேராசிரியர் ஜூலியட் ஹெப்சிபா, டி.வி.எஸ் கள இயக்குநர் பாபு மற்றும் ஊர் நாட்டாமைகள், சமுதாய தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் தேரடிமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நாட்டு நலப்பணித்திட்ட முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, காசிலிங்கபுரம் கிராமத்தை சுத்தம், சுகாதாரத்துடன் பேணி காத்திடவும், பொதுமக்களிடத்தில் பல்வேறு வகையான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளும் வகையில் எம்கல்லூரி மாணவ, மாணவியர்கள் இந்த சிறப்பு முகாமினை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து 7நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், கால்நடை மருத்துவ முகாம், பொது மருத்துவ முகாம், கண்சிகிச்சை முகாம், வேளாண்மை கண்காட்சி, கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்புமிகு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கு இப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு மிகுந்த ஒத்துழைப்பு தந்திடவேண்டும் என்றார்.
இதில், காசிலிங்கபுரம் ஊர் நாட்டாமைகள் சுடலைமணி, முருகன், நடராசன், முருகன், வெங்கடராமசுப்பையா, அஞ்சர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், டி.வி.எஸ். அறக்கட்டளை பரமசிவன், மிஷ்ரா கணேசன், சந்தோஷ், மாணவ, மாணவியர்கள், பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முகாம், தொடக்க விழாவினை தொடர்ந்து பூவாணி கால்நடை மருந்தகம் சார்பில் உதவி இயக்குநர்கள் வேல்மாணிக்கவல்லி, பழனி மற்றும் உதவி மருத்துவர் காசிராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் நாட்டுநலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பணி மேற்கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்களான பேராசிரியர்கள் ரமேஷ், புவனேஸ்வரி, நாட்டு நலப்பணித் திட்ட மாணவ பிரதிநிதிகள் பரத் ராஜ், அகல்யா மற்றும் மாணவ, மாணவியர்கள் செய்து வருகின்றனர்.