நாசரேத்தில் முட்புதரில் கிடந்த பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய சிறுவன் சிவபாலுவை நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் ஊர்மக்கள் பாராட்டினர்.
நாசரேத் மில் ரோடு – மணிநகர் பகுதியில் முட்புதரில் ஒரு பச்சிளம் குழந்தை அழுகிற சத்தம் கேட்டிருக்கிறது. அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த இப்பகுதியில் உள்ள பாலமுருகன் – ராஜேஸ்வரி தம்பதியரின் மகன் சிவபாலு ( வயது 14 ) குழந்தையின் அழுகுரல் கேட்ட திசையில் சென்றுள்ளான். அப்போது அங்கே முட்புதரினுள் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை கிடந்துள்ளது.

உடனே அந்த குழந்தையை சிறுவன் சிவபாலு முட்புதரில் கிடந்த தன்னுடைய கையால் எடுத்து வந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் குழந்தையை காண்பித்துள்ளான்.
இதுகுறித்து நாசரேத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த குழந்தையை மீட்டனர்.
இதையடுத்து நாசரேத் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் அந்தக் குழந்தையை தூத்துக்குடியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார்.தற்போது அந்த குழந்தை காப்பக பராமரிப்பில் நலமாக உள்ளது. இதையடுத்து நாசரேத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிறந்து சில மணி நேரமே ஆன அழகான ஆண் குழந்தையை முட்புதரில் வீசியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிறுவன் என்றும் பாராமல் தைரியமாக முட்புதரில் புகுந்து பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய சிறுவன் சிவபாலு மற்றும் அவனுடைய பெற்றோரையும் நாசரேத் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் நேரில் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இச்சம்பவம் நாசரேத் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.