ஜேசிபி மற்றும் டிராக்டர் பறிமுதல் நீர்வளத் துறையின் தடையை மீறி மண் அள்ளும் பணியை எம்எல்ஏ மீண்டும் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் குளத்தில் நீர்வளத்துறையின் தடையை மீறி மண் அள்ளும் பணியை திருவைகுண்ட தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மீண்டும் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் கௌதம் ஆறுமுகமங்கலம் குளத்தில் ஆய்வு செய்து மூன்று ஜேசிபிக்களையும் ஒரு டிராக்டரையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
கோட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், விவசாயிகள் அவர்கள் தேவைக்கு விதிகளுக்கு உட்பட்டு மண்ணெடுக்க ஏன் தடை செய்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மழைக்காலம் தொடங்கியுள்ளதால் குளத்திற்கும் அதன் கரைகளுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக நீர்வளத் துறையினரால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி மண் அள்ளியதால் பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். கனிம வளங்களை அள்ள விதிமுறைகள் உள்ளன. அதன்படியே நடக்க முடியும் எனக் கூறியபடி பணியிடம் திரும்பிச் செல்ல முயன்றார்.
அப்பகுதி மக்கள் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் வாகனங்களை திரும்பி செல்ல விடாது வழிமறித்தனர். ஏரல் காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தி கோட்டாட்சியரையும் வட்டாட்சியரையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.


