ஆழ்வார்திருநகரி வட்டாரத்திற்குட்பட்ட நாலுமாவடி கிராமத்தில் நடைபெற்ற ‘விளை நிலம் காப்போம் இயக்கம்’ முகாமில், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்ட நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 50% மானிய விலையில் தூயமல்லி, கருங்குருவை, பொக்கூர் சம்பா உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.
இத்திட்டத்தின் கீழ் 50% மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கும் பணியை வேளாண்மை இயக்குநர் கே. வி. முரளிதரன், இ.ஆ.ப. தொடங்கி வைத்தார்.
மேலும், தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கத்தின் கீழ் 50% மானிய விலையில் தக்கைப்பூண்டு விதைகள் வழங்கும் பணியையும், வேளாண்மை இயக்குநர் கே. வி. முரளிதரன், இ.ஆ.ப. மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், இ.ஆ.ப. ஆகியோர் ஆழ்வார்திருநகரி வட்டார விவசாயிகளுக்கு நேரில் வழங்கித் தொடங்கி வைத்தனர்.
இத்திட்டத்தின் மூலம் மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள் மற்றும் பசுந்தாள் உரமான தக்கைப்பூண்டு விதைகளைப் பெற விரும்பும் விவசாயிகள், தங்களது உரிய ஆவணங்களுடன் தென்திருப்பேரையில் அமைந்துள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயனடையுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.


