பெண்களை இழிவாக பேசிய உதயநிதி ஸ்டாலின் எனும் உதவாநிதியை கைது செய், கைது செய் என்று ஸ்ரீவை.,யில் தவெக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதிஸ்டாலின் தஞ்சாவூர் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதால் அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், உதயநிதியை கண்டித்து தூத்துக்குடி மேற்கு மாவட்ட தவெக சார்பில் மாவட்ட செயலாளர் அன்னை விஜிசரவணன் எம்.எல்.ஏ., ஆலோசனையில் மகளிர் அணியினர் ஸ்ரீவைகுண்டம் தேவர் சிலை முன்பு மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயச்சித்ரா தலைமையில் இன்று (4ம்தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் ஈஸ்வரி சங்கர்நாத் கண்டன உரையாற்றியபோது பேசியதாவது, எதிர்கட்சி தலைவர் உதயநிதிஸ்டாலின் அரசியல் நாகரீகத்துடன் பேச கற்றுக்கொள்ளவேண்டும்.
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் போன்ற தலைவர்கள் வழியில் வந்த திமுகவில் அங்கம் வகிக்கும் இளைஞரணி தலைவர் உதயநிதிஸ்டாலின் மறைந்த அந்த தலைவர்களின் வழியில் அரசியல் நாகரீகம் அறிந்து பேச கற்றுக்கொள்ளவேண்டும் என்று மகளிர் அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
ஆளும்கட்சி நல்லது செய்தாலும் எதிர்கட்சி குறை தான் சொல்லும் என்பது வழக்கமானது தான். ஆனால் அந்த குறையை சொல்வதற்கும் தகுதியான வார்த்தைகள் இருக்கிறது. இது தெரியாமல் ஒரு எதிர்கட்சி தலைவர் பேசுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
பெண்களான தாய்குலங்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுவெளியில் பேசிய கருத்துக்களை இளைஞரணி தலைவர் திரும்பபெறும் வகையில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம் என்று கொந்தளிப்புடன் பேசினார்.
இதில், மாவட்ட துணைசெயலாளர் விஜய்முத்து, வழக்கறிஞர் சங்கரலிங்கம், மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிமுருகன், மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி செயலாளர் பொன்ராஜ், அரசு வழக்கறிஞர் ஜெயதீபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆழ்வார் விஜய், ஸ்ரீவை ஒன்றிய இணை செயலாளர் கணேஷ், நிர்வாகிகள் ஸ்ரீவை சிவராமலிங்கம், குமார்பாண்டியன், அம்மமுத்து, ஆறுமுகம், கார்த்திக், ஸ்ரீவை சட்டமன்ற தொகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவர் தில்லை சிதம்பரம் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


