திருச்செந்தூர் முருகர் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் ஆவணி திருவிழா இன்று (31.08.2026) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு அதிகாலை 01:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 01:30 மணிக்கு விஸ்வரூப ஆராதனையும் 02:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தன. காலை 05:15 மணி அளவில் கோவில் உள் பிரகாரத்தில் அமைந்துள்ள செப்பு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. பின்னதாக கொடிமரத்திற்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல வகையான அபிஷேகங்கள் நடந்தன.
தொடர்ந்து கொடி மரத்திற்கு தீவாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் ஏழாவது நாள் சுவாமி சண்முகனார் சிவப்பு சாத்தி கோலத்திலும் எட்டாவது நாள் பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். விழாவின் சிகர நாளான செப்டம்பர் 9ஆம் தேதி காலை தேரோட்டம் நடைபெற உள்ளது.


