
அரசாணை 10யை ரத்து செய்திட கோரி மணக்கரையில் விவசாயிகள் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணை, ஸ்ரீவைகுண்டம் அணையின் நான்கு பாசன வாய்கால்கள் மூலமாக 46ஆயிரத்து 107ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநிலக் கோட்டமானது தமிழக அரசின் அரசாணை எண்:10ன் மூலமாக இரண்டாக பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி கோரம்பள்ளம் மானாவாரி வடிநிலக் கோட்டத்துடன் இணைக்கப்பட்டு விட்டது. இதனால், தாமிரபரணி பாசனத்திலுள்ள விவசாயிகள் தண்ணீர் பெறும் உரிமைகள் பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநிலக் கோட்டமானது பிரிக்கப்படாமல் மீண்டும் பழைய முறைப்படி ஸ்ரீவைகுண்டத்திலேயே செயல்படவேண்டும், தமிழக அரசு இதற்கான அரசாணை 10யை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி தாமிரபரணி பாசன விவசாயிகள் கடந்த வாரம் முற்றுகை போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதற்கிடையே அரசாணை 10யை ரத்து செய்திட வலியுறுத்தி மருதூர் அணையின் கீழக்கால் பாசனத்திற்குட்பட்ட மணக்கரை பஞ்சாயத்திலுள்ள அனந்தநம்பிக்குறிச்சி, மணக்கரை, மணக்கரை வடக்கூர், நடுவக்குறிச்சி விவசாயிகள் சார்பில் ஊர் எல்லையில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு, போராட்ட எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது.
