தமிழ்நாடு மின்பகிர்மான கழக தலைமையகத்தில் இருந்து 2025-26-ம் நடப்பு ஆண்டுக்கான விரைவு தட்கல் திட்டத்தில் தமிழகம் முழு வதும் 10 ஆயிரம் விவசாய விண்ணப்பம் பதிவு செய்ய உத்தரவிடப் பட்டு உள்ளது. அதன்படி தட்கல் முறையில் ஏற்கனவே மற்றும் தற் போது பதிவு செய்த விவசாயிகளுக்கும், மின்பளுவின் தேவைக்கு ஏற்ப விண்ணப்பதாரர்கள் மின் இணைப்பு பெற்றுக் கொள்ள விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது
இதற்காக 5 எச்.பி வரை மின்பளு பயன்படுத்துவோர் ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், 5 எச்.பி முதல் 7.5 எச்.பி வரை மின்பளு பயன்படுத் துவோர் ரூ.2 லட்சத்து 75 ஆயிரமும், 7.5 எச்.பி முதல் 10 எச்.பி வரை பயன்படுத்துவோர் ரூ.3 லட்சமும், 10 எச்.பி முதல் 15 எச்.பி வரை பயன்படுத்துவோர் ரூ.4 லட்சமும் திட்டத் தொகை செலுத்த வேண்டும்.
ஏற்கனவே மின் இணைப்பு கோரி சாதாரண வரிசையில் பதிவு செய்த விவசாயிகள் தட்கல் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பை பெற சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மின்வாரியம் அறிவித்திருந்தது
அதன்படி விவசாயிகள் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை இன்று (18.12.2025) தொடர்பு கொண்டபோது தமிழ்நாடு முழுவதும் இருந்து பத்தாயிரம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதால், இனி வருபவர்களுக்கு தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்க முடியாது என்றும், அரசு மீண்டும் தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்தால் விண்ணப்பித்து மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றனர்
ஏற்கனவே நீண்ட காலமாக மின் இணைப்பிற்காக விவசாயிகள் விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில் தற்போது தட்கல் முறையில் பத்தாயிரம் விண்ணப்பத்திற்கு மட்டுமே அனுமதி அளித்திருப்பதும், விண்ணப்பம் தொடங்கிய வேகத்திலேயே பத்தாயிரம் எண்ணிக்கையை தொட்டதனால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்
எனவே அரசு தட்கல் முறையில் அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

