தட்டார்மடம் அருகே உள்ள தாமரைமொழியைச் சேர்ந்தவர் கந்தையா (48) இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பகை காரணமாக அவரது உறவினரான சிவ சூரியன்(34) என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதில் சிவ சூரியன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த சிவ சூரியன் தட்டார்மடம் போலிஸ் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்கு வந்துள்ளார். அங்கு போலிசார் அவரை மாலையில் வந்து கையெழுத்து போட வருமாறு கூறியுள்ளனர். உடனே சிவ சூரியன் அங்கிருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
மெஞ்ஞானபுரம் அருகே வேப்பங்காடு அந்தோனியார் கெபி அருகே மோட்டார் சைக்கிளில் சிவ சூரியன் அவரது அண்ணன் சின்னத்துரை (40) ஆகியோர் வரும்போது முன்னால் காரில் வந்த ஒரு கும்பல் சிவ சூரியன் பைக் மீது காரை மோதவிட்டுள்ளனர்

அப்போது பைக்கில் இருந்து இறங்கி அருகில் இருந்த தோட்டத்திற்குள் சிவசூரியன் அவரது அண்ணன் சின்னத்துரை ஓடியுள்ளனர். பின் தொடர்ந்து விரட்டிய அந்த கும்பல் சிவ சூரியனை சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மெஞ்ஞானபுரம் போலிசார் விரைந்து வந்து சிவ சூரியன் உடலை பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் காயம் அடைந்த சின்னத்துரையை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபு, சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாய் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி பலிக்கு பலியாக நடந்ததா அல்லது வேறு காரணம் உண்டா என பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

