ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுகவின் மூத்த அரசியல் பிரமுகர்கள் மாற்று அணியில் இடம் பெற்று வருவது திமுகவை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
வரும் 2026ம்ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இப்போது இருந்தே அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.
இந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டத்தை தொடங்கி விட்டார்.
இதுவே திமுகவோ ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. தமிழக வெற்றிக்கழகமும் இதுபோன்று தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டது.
அரசியல் களம் இப்படியாக இருக்க, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுக கட்சியில் இருந்து பிரபலமான முக்கிய பிரமுகர்கள் மாற்று அணியில் இடம் பிடித்து வருவது திமுகவினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ., டேவிட்செல்வின் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவருக்கு அதிமுகவில் சரியான பிடிப்பு இல்லாமல் போனதால் மீண்டும் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்த டேவிட்செல்வின் கனிமொழி எம்.பி.யின் சிபாரிசு மூலமாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்தார்.
மாவட்ட செயலாளர் அனிதாவின் பலமான ஆதரவால் ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் பொறுப்புகளை கவனித்து வந்த டேவிட்செல்வின் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து விட்டார்.
இந்த பரப்பரப்பு அடங்குவதற்குள் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பிரபலமான அரசு வழக்கறிஞரின் மகனான முன்னாள் திமுக வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் ஜனார்த்தனன் சமீபத்தில் பாரதி ஜனதா கட்சியில் இணைந்துள்ளது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூர் முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மறைந்த அரசு வழக்கறிஞரான தாமோதரன் என்பவரது மகன் தான் வழக்கறிஞர் ஜனார்த்தனன்.
இவர் தனது தந்தையார் காலத்திலேயே ஸ்ரீவைகுண்டத்திற்கு குடிபெயர்ந்து வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார். தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் வழக்காடு மன்றங்களை பொறுத்தவரை இவர் பிரபலமான வழக்கறிஞராக இருந்து வருகிறார்.
வழக்கறிஞர் ஜனார்த்தனன் தூத்துக்குடி திமுகவானது ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். அப்போது இவர் மறைந்த முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமியின் தீவிர ஆதரவாளராக இருந்து கட்சி பணியாற்றினார். அதன்பின்பு மாவட்டம் பிரிந்த பிறகு தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை பொறுப்பாளராக இருந்து வந்தார். இந்நிலையில், முன்னாள் திமுக வழக்கறிஞர் அணி பொறுப்பாளரான ஜனார்த்தனன் அக்கட்சியில் இருந்து திடீரென விலகினார்.
அதோடு, திமுகவில் இருந்து வெளியேறிய வேகத்தில் மாநில பா.ஜ., கட்சியின் துணைத்தலைவரும், மூத்த வழக்கறிஞருமான ஆர்.சி.பால்கனகராஜ் முன்னிலையில் வழக்கறிஞர் ஜனார்த்தனன் பா.ஜ.,வில் தன்ணை இணைத்துக்கொண்டார்.
திமுகவில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்துள்ள வழக்கறிஞர் ஜனார்த்தனனுக்கு மாநில சிறுபான்மையினர் அணி துணைத்தலைவர் அசோக்குமார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, மாவட்ட துணைத்தலைவர்களான வழக்கறிஞர்கள் வாரியார், ஸ்ரீவை முத்துராமலிங்கம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜோதிடேவிட், மும்பை வழக்கறிஞர் கடோர்கஜோன் நாடார், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட பா.ஜ.வினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாரம்பரியம்மிக்க சி.எஸ்.ஐ கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜனார்த்தனன் திமுகவில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
இப்படியாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுகவின் மூத்த அரசியல் பிரமுகர்கள் அணி மாறிவருவது திமுகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருவதில் ஆச்சரியமில்லை தான்..!