Mon. Aug 4th, 2025

நாசரேத்தில் நீதிபதி ஜோதிமணி தலைமையில் திருமண்டல தேர்தல் அலுவலகம்: பாதுகாப்பு பணியில் போலீஸார்

நாசரேத் ஆர்ட் தொழிற் பள்ளி விருந்தினர் மாளிகையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் அலுவலகம் இன்று ஜுலை 21 முதல் போலீசாரின் பாதுகாப்புடன் செயல்பட ஆரம்பித்தது.

சி.எஸ்.ஐ. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகிகளின் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து திருமண்டல தேர்தலை நடத்தவும், அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி நியமிக்கப்பட்டு கடந்த ஜுன் மாதம் 26ம் தேதி தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.

திருமண்டல தேர்தல் அதிகாரிகளாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் ரெத்தினராஜ் மற்றும் ஜாண் சந்தோஷம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, பல்வேறு கட்டங்களாக நடைபெறும் தேர்தலின் தொடக்கமாக ஜுலை 13 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் வாக்காளர் பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

மேலும் சபை மக்களால் மேல்முறையீடு செய்யப்பட்டு திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் 23 ந் தேதி அந்தந்த ஆலயங்களில் ஒட்டப்படுகிறது.

பின்னர் முதல் கட்ட தேர்தல் செப்டம்பர் 7 ந் தேதி திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபை பிரதிநிதிகள் தேர்தல் அனைத்து ஆலயங்களிலும் நடைபெறுகிறது.

தொடர்ந்து பல்வேறு பதவிகளுக்கான தேர்தல்கள் சேகர மற்றும் சபை மன்ற அளவில் நடைபெறுகிறது.

இறுதியாக நவம்பர் 12,13 தேதிகளில் நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் வைத்து திருமண்டல பெருமன்ற கூட்டம் நடைபெறுகிறது.

இதில் தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல நிர்வாகிகளாக உபதலைவர், லே செயலர், குருத்துவ காரியதரிசி, திருமண்டல பொருளாளர் ஆகியோருக்கான தேர்தல் நடைபெறுகிறது.

இதற்காக திருமண்டல தேர்தல் அலுவலகம் நாசரேத் ஆர்ட் தொழிற் பள்ளி விருந்தினர் மாளிகையில் இன்று ஜுலை 21 முதல் புதிதாக செயல்பட ஆரம்பித்துள்ளது.

இதில் திருமண்டல நிர்வாகியும், ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில், திருமண்டல தேர்தல் அதிகாரி களான ஓய்வுபெற்ற நீதிபதிகள் ரெத்தினராஜ் மற்றும் ஜாண் சந்தோஷம் ஆகியோர் திருமண்டல தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர்.

மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருமண்டல நிர்வாகி ஜோதிமணி மற்றும் தேர்தல் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கு சாத்தான்குளம் துணைக் கண்காணிப்பாளர் சுகுமார் தலைமையில் நாசரேத் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் . சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்டிபன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியாற்றி வருகிறார்கள்.

த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

Related Post