Sat. Aug 2nd, 2025

ஆழ்வார்திருநகரி அருகே ஆதிநாதபுரம் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா

ஸ்ரீவைகுண்டம்:ஆதிநாதபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டதுடன், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள ஆதிநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா ”கல்வி வளர்ச்சி நாள் விழா”வாக வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியை சித்ரா தலைமை வகித்தார். ஆசிரியர்கள் ஐசக் லூக்கா ஜெபதங்கராஜ், ஆறுமுகபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியை முருகேஸ்வரி பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சிறப்புமிகு திட்டங்கள் மற்றும் அவரது வாழ்க்கை நிகழ்வுகள் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

அதனைத்தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தலைமையாசிரியை சித்ரா இனிப்பு வழங்கினார்.

விழாவில், காமராஜர் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்த பேச்சு, கவிதை, ஓவியப்போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சுகிபொன்ராணி பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்தினார்.

விழாவின் சிறப்பாக மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில், பள்ளி ஆசிரியைகள் காந்திமதி, உச்சிமாகாளி, பெற்றோர்கள் இசக்கியம்மாள், ராஜகனி, பவதாரணி, சுகாதார பணியாளர் வேலம்மாள் மற்றும் மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியை சித்ரா தலைமையில் ஆசிரியை, ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Post