Tue. Jul 1st, 2025

குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி ஆட்சியர் வாகனத்தை வழிமறித்து போளாச்சி அம்மன்குளம் கிராம மக்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட போளாச்சி அம்மன் குளம், அவுரிவாக்கம், கமால மடம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மொதூர் ஊராட்சியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது, அதன் பின் மின் மோட்டார் மூலம் தண்ணீரானது அந்தந்த பகுதிகளில் உள்ள உயர்நிலை மேல்நிலைத் தொட்டியில் நிரப்பப்பட்டு அதன் வழியாக பொதுக் குழாய் மூலம் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது,

இந்த நிலையில் கடப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று சட்ட விரோதமாக கூட்டு குடிநீர் திட்ட குழாயிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது

ஏற்கனவே மேற்கண்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தனியார் சிலர் இதுபோன்று மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் போதிய குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது

இது குறித்து மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக தெரிகிறது

இந்த நிலையில் பழவேற்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவ்வழியாக வந்து கொண்டிருந்தபோது போளாச்சி அம்மன்குளம் கிராம மக்கள் ஆட்சியரின் வாகனத்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது சட்டவிரோத தண்ணீர் திருட்டை தடுக்க வலியுறுத்தியும், தடையில்லா குடிநீர் வழங்க கோரியும் ஆட்சியரிடம் அவர்கள் முறையிட்டனர்,

கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர் குடிநீர் கேட்டு ஆட்சியரின் வாகனத்தை வழிமறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

உடனடியாக தகவல் அறிந்து வந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்து குடிநீர் குழாயில் இருந்து திருட்டுத்தனமாக மின் மோட்டார் மூலம் உறிஞ்சப்படும் இடங்கள் மற்றும் வீடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

ஜே. மில்ட்டன்,
திருவள்ளுர்

Related Post