தாமிரபரணி நதியை பாதுகாத்திட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ”வக்பு உரிமை மீட்பு பொதுக்கூட்டம்” செய்துங்கநல்லூரில் மாவட்ட பொருளாளர் நவாஸ் தலைமையில் நடந்தது.
மாவட்ட தலைவர் ஷேக் அஷ்ரப்அலி, மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல்காதர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி தலைவர் பவுசர் அலி வரவேற்றார்.
கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் அபுதாஹிர், ரத்தினம் அண்ணாச்சி, மாநில செயலாளர் அப்துல்லா ஹஸ்ஸான்பைஜி ஆகியோர் கலந்துகொண்டு, மத்திய அரசு இஸ்லாமியர்களின் கடுமையான எதிர்ப்பினை மீறியும், அரசியல் அமைப்பிற்கு விரோதமாகவும் கொண்டுவர துடிக்கும் வக்பு மசோதா 2024யை உடனடியாக ரத்து செய்திடவேண்டும், 1991ம் ஆண்டின் வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி இறை இல்லங்களை பாதுகாத்திடவேண்டும் என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில், அனைத்து பயணிகள் பேருந்துகளும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்லவேண்டும், இதுபோன்று இந்த வழித்தடத்திலுள்ள கேமலாபாத் ஊரிலும் அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நின்று செல்லவேண்டும்.
தாமிரபரணி நதிநீரை தூய்மைப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கலக்காமல் பாதுகாக்கவேண்டும்,
செய்துங்கநல்லூர் பஜாரில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும், செய்துங்கநல்லூரில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அரசின் சித்த மருத்துவமனை பூட்டப்பட்டுள்ளது, இந்த சித்த மருத்துவமனையை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குலசை தாஹிர்,துணைத்தலைவர் ஜாகிர் உசேன், செய்துங்கநல்லூர் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் இமாம் ஹசன் ஞானியார்பைஜி மற்றும் மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.