தூத்துக்குடி புதுக்கோட்டை அருகேயுள்ள சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்திற்குட்பட்ட சிவஞானபுரத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் காளீஸ்வரி தலைமையில் சிவஞானபுரம் ஊர் தலைவர் பாலையா, செயலாளர் பாஸ்கரன், நிர்வாகிகள் லிங்கதுரை, வெற்றிவேல், சங்கர் ஆகியோர் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்
அம்மனுவில் விவசாயத்தை அடிப்படையாக கொண்டுள்ள எங்கள் கிராமத்தில் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய ஏழ்மையான நிலையில் குடியிருப்பதற்கு சொந்தமாக வீடு மற்றும் வீடு கட்டுவதற்கு சொந்தமாக நிலம் எதுவும் இல்லாத நிலையில் ஏராளமானவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

கூலி வேலை செய்து வாழ்ந்து வரும் மக்கள் தற்போது குடியிருக்கும் பழமையான வீடுகள் மிகவும் பழுதான நிலையில் எந்தநேரத்திலும் இடிந்து விழுந்திடும் அபாய நிலையில் இருந்து வருகிறது.
இதுபோன்று இக்கிராமத்தில் ஏராளமானவர்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்கு இடம் இருந்தும் போதுமான வருமானம் இல்லாமல் வீடு கட்டுவதற்கு வழியின்றி பரிதவித்து வருகின்றனர்.
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் எங்கள் கிராமத்தை சேர்ந்த பத்திரகாளி, ராதா, ராசாத்தி, சாந்தி, அமலசந்திரா, அனிதா, ராதா உள்ளிட்ட சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் சொந்தமாக வீடு கட்டி குடியேறிட ஏதுவாக தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிடவேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் இலவசமாக வீடு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு ‘இலவச வீடுகள்’ கட்டித்தந்து உதவும்படி ஊர் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறியுள்ளனர்.
மனு கொடுக்க சிவஞானபுரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானவர்கள் வந்திருந்த நிலையில் அனைவரும் தனித்தனியாக கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.


