Tue. Apr 29th, 2025

புன்னகை தேசம் செய்தி எதிரொலி – கோட்டாட்சியர் அலுவலகங்களில் பிப்ரவரி 18 ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – விவசாயிகள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாதந்தோறும் மூன்றாவது வியாழக்கிழமை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்.

ஜனவரி மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும்  கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துக் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் எனவும், மேற்படி கூட்டத்திலும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை  ஏற்றுக் கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம் பகவத் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் வைத்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்றும், அக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் உடனடியாக அறிவித்தார்.

ஆனால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வைத்து நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் நமது புன்னகை தேசம் செய்தித்தளத்தில் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டது

செய்தி வெளியிடப்பட்ட இரு தினங்களுக்குள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மூன்று கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் பிப்ரவரி மாதம் 18 ம் தேதி காலை 11 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகங்களில் வைத்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என  கோட்டாட்சியர் அவர்கள் அறிவித்துள்ளனர்

தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு அவர்கள் தலைமையில் தூத்துக்குடியில் வைத்தும், திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன் அவர்கள் தலைமையில் திருச்செந்தூரில் வைத்தும், கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலெட்சுமி அவர்கள் தலைமையில் கோவில்பட்டியில் வைத்தும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் எனவும், இக்கூட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொள்வார்கள் எனவும், இக்கூட்டத்தில் கோட்ட அளவிலான   அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன் பெற்றுக் கொள்ளும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சியும், கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்  நடத்துவதற்கு உத்தரவிட்ட தூத்துக்குடி  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், கோட்டாட்சியர்களுக்கும் நன்றியையும் தெரிவித்தனர்

செய்தி வெளியிட்ட புன்னகை தேசம் செய்தி தளத்திற்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்

Related Post