தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாதந்தோறும் மூன்றாவது வியாழக்கிழமை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பார்கள்

மேற்படி கூட்டத்தில் விவசாயிகள் வேளாண்மை துறை சார்ந்த மற்றும் சாராத கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து தீர்வு கண்டு வந்தனர். கோரிக்கைகள் மனு மீது விசாரணை மேற்கொண்டு அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்திற்குள் தீர்வுகள் காணப்படும். இதனால் விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்து வந்தனர்

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துக் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் எனவும், மேற்படி கூட்டத்திலும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம் பகவத் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் வைத்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்றும், அக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் உடனடியாக அறிவித்தார்.

பிப்ரவரி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை அடுத்த வாரம் விவசாயிகள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற வேண்டிய நிலையில், தற்போது வரை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கோட்ட அளவில் நடைபெறவில்லை.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்ட அளவில் நடைபெற்றால் நாங்கள் அதிக தூரம் பயணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டிய தேவை இருக்காது. எங்களது கோரிக்கையை நாங்கள் எளிதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து தீர்வு காண முடியும்.
எனவே தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவை செயல்படுத்தி கோட்டளவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கூட்டம் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்