தூத்துக்குடி மாவட்டத்தில் தென்கொடியில் அமைந்துள்ளது சாத்தான்குளம். தாலுகா காவல் நிலையம் சாத்தான்குளத்தில் அமைந்துள்ளது
சாத்தான்குளம் காவல் நிலையம் அமைதியாக இருந்து வந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் நடைபெற்ற தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணம் அடைந்ததால் பொதுமக்களால் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தியதன் காரணமாக அப்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது
அதன் பிறகு சாத்தான்குளம் காவல் நிலைய பணிக்கு அதிகாரிகள் வர மறுப்பதாக வதந்தி பரவி வந்தது
உடனடியாக வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு காவல் ஆய்வாளர் உட்பட அனைத்து பணியிடங்களும் விரைவாக நிறைவேற்றப்பட்டது
இந்நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஏசு ராஜசேகரன் அவர்கள் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், அதன் பிறகு காவல் ஆய்வாளராக வந்த ராஜ் அவர்கள் மரணம் அடைந்ததும் சாத்தான்குளம் பகுதி மக்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
மேலும் பிற பணிகளை மேற்கண்ட உதவி ஆய்வாளர்களும், காவலர்களும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் பொதுமக்கள் இடையே தகவல் பரவி வருகிறது.
தந்தை மகன் கொலை நடைபெற்ற பிறகு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணி செய்ய வரும் காவல் அதிகாரிகளும், காவலர்களும் வழக்கு, சிறை, மரணம், உடல் நலக்குறைவு என ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும், அதனால் சாத்தான்குளம் காவல் நிலைய பணிக்கு காவல் அதிகாரிகளும், காவலர்களும் வர மறுப்பதாகவும் வந்தாலும் உடனடியாக இடமாறுதல் வாங்கி சென்று விடுவதாகவும் பொதுமக்கள் இடையே வதந்தி பரவி வருகிறது
மேலும் சாத்தான்குளம் காவல் நிலையம் வாஸ்து பிரகாரம் கட்டப்படவில்லை. அதனால் தொடர்ந்து விரும்பத்தகாத சம்பவம் நடைபெறுவதாகவும், ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்திற்குப் பிறகு தொடர்ந்து காவலர்கள் பிரச்சனைகளை சந்திப்பதனால், பரிகார பூஜை நடத்த வேண்டும் எனவும் பொது மக்களிடையே வதந்தி பரவி வருகிறது
மேலும் சாத்தான்குளத்தில் பெரும்பாலான காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதனாலும், பணியில் உள்ள காவலர்கள் விடுமுறையில் சென்றிருப்பதாலும் சாத்தான்குளத்திற்கு காவல் பணிக்கு வரும் குறைந்த அளவிலான காவலர்களுக்கு அதிகப்படியான பணிச்சுமையை ஏற்படுத்தி மன அழுத்தம் ஏற்படுவதனால் சாத்தான்குளத்திற்கு காவல் பணி செய்ய காவலர்கள் வரவில்லை என சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்
எனவே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காலியாக உள்ள காவல் ஆய்வாளர் உள்பட அனைத்து காவலர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பி பொதுமக்கள் இடையே பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மக்களிடையே காவல்துறையினர் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்
பா. ஜான்சன் பொன்சேகர், புன்னகை தேசம் நிருபர்

