நாசரேத் பேருந்து நிலையத்திற்குள் வராமல், சந்தியிலேயே திரும்பிச் செல்லும் அரசு பேருந்துகளால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமும் காலையில் ஸ்ரீவைகுண்டம் பணிமனையிலிருந்து புறப்பட்டு, உடன்குடி மற்றும் சாத்தான்குளம் செல்லும் அரசு பேருந்துகள் நாசரேத் சந்தியிலிருந்து திரும்பிச் செல்வதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேருந்துகள் நாசரேத் பேருந்து நிலையத்திற்குள் வருவதில்லை என்றும், இதனால் பயணிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இரவு நேரத்தில் திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் காத்திருக்கும் பலர், அதிகாலையில் திருச்செந்தூர் நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறி ஆழ்வார்திருநகரி வந்து, அங்கிருந்து நாசரேத் செல்ல உடன்குடி, சாத்தான்குளம் செல்லும் பேருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், நாசரேத் வரும் பேரூந்து பயணிகளைச் சந்தியிலேயே இறக்கிவிடுவதால், அங்கிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து நாசரேத் பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மேலும், சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு வரும் ரயில் அதிகாலை 5 மணியளவில் நாசரேத் வந்தடைகிறது. இந்த ரயிலில் வரும் பயணிகளில் பலர் சாத்தான்குளம், உடன்குடி, உவரி, திசையன்விளை, மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், அதிகாலையில் பேருந்து பஸ்டாண்டுக்குள் வராததால், காலை 5 மணி முதல் 7 மணி வரை பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவலநிலை இருப்பதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
நீண்ட நேரக் காத்திருப்பைத் தவிர்க்கும் வகையில், சிலர் வேறு வழியின்றி ஆட்டோவில் பயணம் செய்கின்றனர். இதற்காக ரூ.600 முதல் ரூ.700 வரை செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதனால், குறிப்பாக அதிகாலை நேரத்தில் பயணம் செய்யும் பொதுமக்கள் பொருளாதாரச் சுமையையும், காலதாமதத்தையும் எதிர்கொள்கின்றனர்.
எனவே, பொதுமக்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீவைகுண்டம் பணிமனையிலிருந்து இயக்கப்படும் உடன்குடி, சாத்தான்குளம் வழித்தடப் பேருந்துகள் அதிகாலை நேரங்களில் நாசரேத் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயிலில் வரும் பயணிகளின் வசதிக்கேற்ப பேருந்து சேவைகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கும் அரசுக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேருந்து நிலையம் இருந்தும் பேருந்துகள் உள்ளே வராத நிலைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்? பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


