நாசரேத் அருகே கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 21 வயது வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள மணிநகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். கூலித் தொழிலாளியான இவரது ஒரே மகன் சூர்யபிரகாஷ் (21).
இவர் நாசரேத் சந்தைப் பகுதியில் உள்ள குளிர்பானக் கடையில் வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில், நேற்று இரவு வாழையடி பகுதியில் இருந்து நாசரேத் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சூர்யபிரகாஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
இதில் சம்பவ இடத்திலேயே சூர்யபிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த நாசரேத் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சூர்யபிரகாஷின் உடலைக் கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மாரி செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.
இச் சம்பவம் நாசரேத் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


