திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை மனகாவலம் பிள்ளை நகர் பகுதியில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மனகாவலம் பிள்ளை நகர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த டேவிட் என்பவரது மகன் சாம் சாலமன் பிரபாகர் டேவிட் (35). இவர் தனது இருசக்கர வாகனத்தில் சாந்தி நகர் செல்லும் சாலையில் இருந்து தனது வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் அவரைப் பின்தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், அவரை வழிமறித்து இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே தள்ளியுள்ளனர். தொடர்ந்து தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சாம் சாலமன் பிரபாகர் டேவிட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், கொலை நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
உயிரிழந்த சாம் சாலமன் பிரபாகர் டேவிட் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதுடன், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் சாலையில் இருசக்கர வாகனத்தில் விரட்டி வந்து ஒருவரை வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பியோடிய இருவரையும் பிடிக்க போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் சம்பவ இடத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


