தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடு அமைந்துள்ளது. இத்திரு கோவிலின் ஆவணி திருவிழா கடந்த மாதம் 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிகர நாளான இன்று (09.09.2026) பத்தாம் திருவிழாவை முன்னிட்டு காலையில் தேரோட்டம் நடந்தது. முன்னதாக விநாயகர் நான்கு ரத வீதிகளிலும் விநாயகர் தேர் வலம் வந்தது.

அதனைத் தொடர்ந்து சண்முகனார் வள்ளி, தெய்வானையுடன் அமர்ந்திருக்கும் பெருந்தேரினை இணை ஆணையர் அருணாச்சலம், துணை ஆணையர் நாராயணன், உதவி ஆணையர் லோகநாதன், தக்கார் அருள் முருகன், காயமொழி ஆதித்தன் நாடார் சார்பில் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவ உதவி இயக்குனர் பால சுப்பிரமணிய ஆதித்தன் உட்பட நிர்வாகிகள் வடம் பிடித்து தேரோட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
முன்னதாக சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. தேர் நான்கு பெருரத வீதிகளிலும் உலா வந்தது. இருபுறங்களிலும் குவிந்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னதாக அம்மாள் தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தது.
நான்கு ரத வீதிகளிலும் தேர் ஓட்டத்திற்காக மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆங்காங்கே பக்தர்களுக்கு இலவச குடிநீர் வழங்கப்பட்டது. காவல்துறையினர் பக்தர்களின் பாதுகாப்பில் ஈடுபட்டு சிறப்பாக செயலாற்றினர்.


