தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளத்தில் வீட்டின் முன்பாகக் கழிவுநீர் ஓடுவது தொடர்பான முன்விரோதத் தகராறில் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்வார்கற்குளத்தைச் சேர்ந்த மாரியப்பன் குடும்பத்தினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கும் இடையே வீட்டின் முன்பாகக் கழிவுநீர் செல்வது தொடர்பாக நீண்டநாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு அப்பகுதியில் உள்ள கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை நிறைவடைந்த பிறகு, ஊர் மக்கள் பலர் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, மாரியப்பன் தரப்பினருக்கும் சுந்தர்ராஜன் தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுப் பலத்த தகராறாக மாறியது.
ஆத்திரமடைந்த இருதரப்பினரும் கத்தி, வாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் மாரியப்பனின் மகன் இசக்கிராஜா (20) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் எதிர் தரப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையப் போலீசார் விரைந்து சென்று, உயிரிழந்த இசக்கிராஜாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து இருதரப்பினரும் அளித்த புகார்களின் அடிப்படையில், மாரியப்பன் தரப்பில் 4 பேர் மீதும், எதிர் தரப்பைச் சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்ட 10 பேர் மீதும் என மொத்தம் 14 பேர் மீது ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


