புதுடில்லி: நியூஸ்கிளிக் இணையதள செய்தி நிறுவனர் மீதான வழக்கில் 8 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், நியூஸ் கிளிக் என்ற இணைய செய்தி நிறுவனம், சீனாவுக்கு ஆதரவாக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது தெரியவந்தது. இதற்காக பெருந்தொகை பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக புதுடில்லி போலீசின் சிறப்புப் பிரிவு விசாரித்தது. கடந்தாண்டு அக்., 3ல் இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் உட்பட, 88 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்நிறுவனத்தின் நிறுவனரும், முதன்மை ஆசிரியருமான பிரபிர் புர்கயஸ்தா, எச்.ஆர்., அமித் சக்கரவர்த்தி ஆகியோர் ஜனவரியில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டக்கார்களுக்கு பணம் கொடுத்தது, உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடில்லி சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை நடந்து வருகிறது. நேற்று நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா உள்ளிட்டோர் மீது 8 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கையை டில்லி போலீசார் தாக்கல் செய்தனர்.