Mon. Aug 25th, 2025

சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புறக்கணிக்கப்படுகிறதா? மூடுவதற்கு திட்டமிடலா? என பொதுமக்கள் கேள்வி

சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர் உரிய நேரத்தில் பணிக்கு வராமலும், சுகாதார செவிலியர்கள் பணி செய்யாமலும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமலும், அரசு வழங்கும் சலுகைகளை மக்களுக்கு வழங்காமல்  இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம், ஆழ்வார்திருநகரி வட்டாரத்திற்குட்பட்ட ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கிராமம் சாலைப்புதூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் மகப்பேறு மையமும் செயல்பட்டு வருகிறது.  இந்த சுகாதார நிலையத்திற்கு கீழ் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கருங்கடல், மீரான்குளம் துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

வேலை நேரத்தில் பூட்டிய நிலையில் மீரான்குளம் துணை சுகாதார நிலையம்

மேற்படி சுகாதார நிலையம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் அதே நிலையில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சுகாதார நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இதனுடன் ஆரம்பிக்கப்பட்ட முதலூர், ஆனந்தபுரம், கருங்குளம், உடையார்குளம் போன்ற சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த சுகாதார நிலையம் மட்டும் தரம் உயர்த்தப்படாமல் உள்ளது

இந்நிலையில் சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்ற வேண்டிய இரண்டு மருத்துவ அலுவலரில் ஒருவர் மட்டுமே தற்போது பணியாற்றி வருகிறார்

வேலை நேரத்தில் பூட்டிய நிலையில் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் துணை சுகாதார நிலையம்

மற்றொரு மருத்துவ அலுவலர் மாற்றுப் பணிக்காக வேறு இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்

தற்போது பணியில் உள்ள மருத்துவரும், பணிபுரியும் எல்கைக்கு உட்பட்ட பகுதியில் தங்கி பணிபுரிய வேண்டும் என்று சட்டம் உள்ள நிலையில், நாசரேத்தில் இருந்து சாலைப்புதூர் சுகாதார நிலையத்திற்கு பணிக்கு காலை 10 மணிக்கு வந்துவிட்டு மாலை 2.30 க்கு கிளம்பி சென்று விடுவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.  சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடியிருப்பு வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தெற்கு பேய்க்குளத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்ட நிலையில்

சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பணி நேரத்தில் இல்லாத காரணத்தினால் 24 மணி நேரம் மணி நேரமும் அவசர சிகிச்சை அளிக்கப்படாமலும், பிரசவங்கள் மேற்கொள்ளாமலும் இருப்பதாக பொதுமக்கள் தெரிகின்றனர்

இதனால் சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்படுத்தும் பொதுமக்களும் நோயாளிகளும் மிகுந்த சிரமத்தை அடைந்து வருகின்றனர்

மீரான்குளம் துணை சுகாதார நிலையம், பஞ்சாயத்து அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஏற்பட்ட சுகாதார சீர்கேடு

இதுகுறித்து சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் அலுவலர்களிடம் கேட்டால், சாலைப்புதூரில் பணியாற்றும் மருத்துவ அலுவலர் வட்டார மருத்துவ அலுவலரிடம் அனுமதி பெற்று தான் தாமதமாக வருகிறார்கள் என்று தெரிவிக்கின்றனர்

தாமதமாக வரும் மருத்துவர் மீது ஏன் வட்டார மருத்துவர் அலுவலர் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையமானது சில வருடங்களுக்கு முன்பு அதிக பிரசவம் நடைபெற்ற சுகாதார நிலையம் என விருது பெறப்பட்டது. தற்போது கடந்த மூன்று மாதங்களாக சாலைப்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் நடைபெற வில்லை என தெரிவிக்கின்றனர்.

மேலும் பிரசவத்திற்கு செல்பவர்களை சாத்தான்குளம் அல்லது திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

சாலைப்புதூர் சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வந்த ஸ்கேன் மிஷின் வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாகவும் தெரிய வருகிறது.

மேலும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யப்படும் என்றும், அன்று பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு உணவு வழங்கப்பட்டதாகவும், தற்போது அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும், அரசு வழங்கும் உதவித்தொகைகள், இலவச பொருட்களையும் சீராக வழங்குவதில்லை எனவும் கர்ப்பிணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்

இன்று (27.06.2025) மீரான்குளம் துணை சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற வேண்டிய குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

முதலூர் துணை சுகாதார நிலையத்தில் பணி நேரத்தில், பணியில் மருத்துவர் இல்லாத இருக்கை

சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதனால் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்

இரவு நேரங்களில் மருத்துவரும் செவிலியரும் பணியில் இல்லாத காரணத்தினால், இரவு நேர காவலரும் இல்லாத நிலையில் சாலைப்புதூர் அரசு ஆரம்ப  சுகாதார நிலையம் பூட்டிக் கிடப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

மேலும் கருங்கடல், மீரான்குளம்  துணை சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பணியிடம் காலியாகவும், சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர் பணியிடம் காலியாகவும்,  மருந்தாளுநர், சுகாதார  ஆய்வாளர் (நிலை I) ஆகிய பணியிடங்கள் காலியாகவும் உள்ளதாகவும், மேற்படி பணியிடங்கள் காலியாக உள்ளதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது போலவே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கருங்கடல், மீரான்குளம்  துணை சுகாதார நிலையங்களில் இருந்து பணிபுரிய வேண்டிய மக்களைத் தேடி திட்ட சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களது பணிகளை செய்யாமல், துணை சுகாதார நிலையங்களை மூடி வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேற்படி ஊழியர்கள் தங்களது பணிக்கு வராமலே சம்பளம் பெற்று கொண்டிருக்கிறார்கள் என்றும் புகார்கள் எழுந்துள்ளது

மேற்படி மக்களை தேடி சுகாதார செவிலியர்கள், சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பணிகளை மேற்கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாலைப்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வீடு, கடைகளில் இருந்து கழிவு நீரை சாலைகள், தெருக்களில் விடுவதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், மேற்படி நபர்கள் மீது சுகாதாரத்துறையினர் எந்த விதமான நடவடிக்கை எடுக்க மறுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறாக சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதாரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணி முறையாக செய்யாமலும், பல்வேறு பணியிடங்கள் காலியாக  உள்ளதனாலும், சாலைப்புதூரில் செயல்பட்டு வந்த ஸ்கேன் மையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாலும், பிரசவங்கள் தற்போது பார்க்காமல் இருப்பதாலும் காலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை புறக்கணிப்பதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு வருகின்றனர்  

தெற்கு பேய்க்குளத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்ட நிலையில்

எனவே சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர்கள் ஆய்வு செய்து முறைகேடு செய்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கவும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், பிரசவம் பார்ப்பதற்கும், அரசு வழங்கும் உதவித்தொகை மற்றும் இலவச பொருட்களை முறையாக வழங்கவும்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மா காளியப்பன்,
புன்னகை தேசம் நிருபர்

Related Post