மெஞ்ஞானபுரம் அருகே பள்ளி மாணவன் சிகரெட் பிடித்ததற்கு பெரியம்மா சத்தம் போட்டதால் தாய்க்கு பயந்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டான்.
மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள தாய்விளை நடுத்தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி அமுதா(40) தம்பதியினருக்கு 2ஆண்பிள்ளைகள் உள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மூத்தமகன் சபரிமுத்து(14) மெஞ்ஞானபுரத்தில் உள்ள பள்ளியில் 9ம்வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 5ம்தேதி அங்குள்ள கடையொன்றில் சபரிமுத்து சிகரெட் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது அவரது பெரியம்மா முத்துலெட்சுமி பார்த்து கண்டித்துள்ளார். இதனால் வீட்டிற்கு தெரிந்து விடும் என்று நினைத்து அருகேயுள்ள படுகை தோட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் களைக்கொல்லி மருந்தினை எடுத்துக் குடித்துள்ளார். வாந்தி எடுத்த சபரிமுத்துவை நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 20ம்தேதி சிறுவன் சபரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற மெஞ்ஞானபுரம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தாய் அமுதா அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.