தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின்படி, நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும், சுற்றுப்புற பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவியரும் கல்லூரி கனவு நிகழ்ச்சியின் வாயிலாக பல்வேறு கல்லூரிகளுக்கு களப்பயணமாக சென்றனர், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கண்டிப்பாக உயர் கல்வியில் இணைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு கல்லூரி கனவு திட்டமானது தமிழ் நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியர் அருகாமையில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள், சிறப்பம்சங்கள், கட்டிட வசதிகள், ஆய்வக வசதிகள் குறித்தும், கல்லூரி கட்டணம் மற்றும் கல்வி உதவித் தொகைகள் குறித்தும் அறிந்துகொள்ள வசதியாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், சாலைப்புதூர் ஏக இரட்சகர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆகியோர் நாசரேத்தில் உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி மற்றும் மர்காஷிஸ் கல்லூரி ஆகியவற்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், கல்லூரி பேராசிரியர்கள் ஸ்டான்லி மற்றும் ரூபன் ஆகியோரும், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி பேராசிரியர் ஜூட் லிவிங்ஸ்டன், உடற்கல்வி இயக்குனர் ரோக்லேண்ட் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சாமுவேல் ஆகியோரும், கல்லூரிகளில் வழங்கப்படும் பாடப்பிரிவுகள், எதிர்கால வேலை வாய்ப்புகள் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
அனைத்து மாணவ மாணவியருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பல்வேறு பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்கள் பேரின்பம், கிரேஸ் சகாயஷேபா, சாத்ராக், மாலதி, பிரிசில்லா லிஸி, ஆஷா, ஷெல்லா மெர்லின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுபா ஜேனட் ஆனந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
த ஞான் ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நிருபர்
94 87 44 56 55