மின் கட்டணம் மின்வாரியத்தில் நேரில் செலுத்த படிப்படியாக கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் தான் இனி செலுத்த முடியும்.
இதனால் கிராமப்புற மின் நுகர்வோருக்கு கூடுதல் சுமை அதிகரிக்கும்.
எனவே ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின்கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே கட்ட முடியும் என்ற முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் நுகர்வு கணக்கெடுக்கப்படுகிறது. கணக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து இருபது நாட்களுக்குள் பத்தாயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்தை அபராதமின்றி நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம்.
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து நான்காயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்துபவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என மின்வாரியம் அறிவித்து அது நடைமுறைக்கும் வந்து விட்டது.
தற்போது இதுவும் படிப்படியாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் மூவாயிரம், இரண்டாயிரம், ஆயிரம் என குறைக்கப்பட்டு அதன் பிறகு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் மட்டுமே மின்வாரிய அலுவலகத்தில் நேரில் மின்கட்டணம் செலுத்த இயலும். மற்றவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என அறிவிப்பு எழுதி அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
இனி கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தனியார் கம்ப்யூட்டர் செண்டர்களில் அதற்குரிய சேவைக் கட்டணங்கள் சேர்த்துதான் மின்கட்டணம் செலுத்த இயலும்.
இதனால் கிராமப்புற மக்களுக்கு கூடுதல் பணச் செலவு ஏற்படும். மறைமுகமாக ஆட்குறைப்பு செய்யும் திட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது என கூறப்படுகிறது.
மின்வாரியத்தின் ஷாக் அடிக்கும் இந்த அறிவிப்பால் பொதுமக்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவைத் தவிர்ப்பதற்காக முன்பிருந்ததைப் போல் பத்தாயிரம் ரூபாய் வரையிலான மின் கட்டணத்தை நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்தும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
