Sun. Jan 18th, 2026

சாத்தான்குளத்தில் தமிழ்நாட்டு முறையில் பொங்கல் திருநாளை கொண்டாடிய திரிபுரா பெண் டாக்டர்

பட்டுப் புடவை அணிந்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய திரிபுரா பெண் டாக்டர்.

தங்கள் மாநிலத்திலும் இதே நாளில் ஹங்ராய் என கொண்டாடுவதாகவும் தெரிவித்தார்.

திரிபுராவைச் சேர்ந்தவர் டாக்டர் சுப்ரியா. இவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நரம்பியல் சிறப்பு டாக்டருக்கு படித்து வருகிறார்.

இவருக்கும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த நரம்பியல் சிறப்பு மருத்துவர் டாக்டர் திலீபன் மகாராஜன் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

தற்பொழுது தலைப் பொங்கல் கொண்டாடுவதற்காக சாத்தான்குளம் வந்த தம்பதியர் பொங்கல் கொண்டாடினர்.

தமிழ் பாரம்பரிய முறைப்படி பட்டுச் சேலை அணிந்து அதிகாலையில் வீட்டின் முற்றத்தில் பொங்கலிட்டு மகிழ்ந்தார்.

இது பற்றி டாக்டர் சுப்ரியாவிடம் கேட்டபோது தமிழ்நாட்டின் கொண்டாடப்படும் பொங்கல் போன்று திரிபுராவில் ‘ஹங்ராய்’ என்ற அறுவடைத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13 ம்தேதி இரவு சிறுசிறு குழுக்களாக மூங்கில் மற்றும் வைக்கோல் மூலம் சிறிய குடில் செய்து சிறுவர்கள் நடனம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எனத் தொடங்கி 14ஆம் தேதி விடியற்காலை கடும் குளிரில் மூன்று முறை ஆற்றில் மூழ்கி எழுந்து மூத்த உறவினர்களைச் சந்தித்து வாழ்த்து பெறுவர். அதன் பிறகு புதிய அரிசியில் இட்ட பொங்கலை இலையில் சுருட்டி அந்த குடிலை எரித்து வரும் நெருப்பில் வாட்டி எடுத்து தயாரிக்கும் கொழுக்கட்டை போன்ற பதார்த்தத்தை ‘அவான் ‘என அழைப்போம்.

அதை பிரசாதமாக வழங்குவர். திரிபுராவில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் ‘ஹங்ராய்’ என்ற அறுவடைத் திருநாள் தமிழ்நாட்டிலும் அறுவடைத் திருநாளாக பொங்கல் கொண்டாடப்படுவதை அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

Related Post