ஸ்ரீவைகுண்டத்தில் நாளை வக்கீல்கள் உண்ணாவிரதப்போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
ஆனால், பல வருடங்கள் கடந்தும் இப்பணிகள் தொடங்குவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யவே இல்லை. தேவையான இடவசதிகள் இருந்தும் கட்டுமானப்பணிகளும் தொடங்கப்படவே இல்லை.
இதனால், நீதிமன்றம் ஆபத்தான பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ரூ.33கோடி மதிப்பிலான புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கவேண்டும்.
கட்டுமானப்பணிகளை உடனடியாக துவங்கவேண்டும் என்று வலியுறுத்தி நாளை (புதன்கிழமை) ஸ்ரீவைகுண்டம் வக்கீல்கள் சங்கம் சார்பில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
வக்கீல்களுக்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டமும் நடத்த உள்ளனர்
இப்போராட்டத்தில், வழக்கறிஞர்கள், வணிகர்கள், அரசியல்கட்சியினர், ஆட்டோ ஒட்டுநர்கள், தொழிற்சங்கத்தினர், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தந்து தவறாமல் பங்கேற்றிட வேண்டும் என்று ஸ்ரீவைகுண்டம் வக்கீல்கள் சங்க தலைவர் கருப்பசாமி, செயலாளர் வெங்கடாசலபதி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


