Tue. Jul 1st, 2025

சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவு வருவதில் சிக்கல் – அரசு நிதி ஒதுக்கியும் இட வசதி இல்லாததால்

சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி தாலுகா மருத்துவமனையாகத் திகழ்கிறது.

சாத்தான்குளம் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு உள்ள ஒரே அரசு ஆஸ்பத்திரியாக இது உள்ளது.

தினசரி 300 முதல் 350 வெளி நோயாளிகளும் முப்பது முதல் 40 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு ரத்த சேமிப்பு வங்கி ,மகப்பேறு ஆபரேஷன் தியேட்டர், பச்சிளம் குழந்தைகள் பிரிவு, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம், 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு உட்பட பல சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகிறது.

டாக்டர்கள் செவிலியர்கள், ஊழியர்கள் என இங்கு 42 பணியிடங்களில் 20 பணியிடங்கள் காலியாகவே உள்ளது.

சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுநீரக நோய் பாதிப்பால் டயாலிசிஸ் தேவைப்படும் ஏழை நோயாளிகள் பலர் உள்ளனர். இவர்கள் டயாலிசிஸ் சிகிச்சை பெறுவதற்கு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்று வருகின்றனர்.

எனவே இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவு துவங்க வேண்டும் கோரிக்கை என வைக்கப்பட்டது .

இது பற்றி இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மாநிலச் செயலாளர் லூர்துமணி மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் முதலமைச்சர் தனிப் பிரிவிற்கு கோரிக்கை மனு அனுப்பினர்.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர்  ஊர்வசி அமிர்தராஜ் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து டயாலிசிஸ் பிரிவு தொடங்குவதற்கு கோரிக்கை விடுத்தார்

சட்டமன்ற உறுப்பினரின்  கோரிக்கையின் தொடர்ச்சியாக தற்பொழுது சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை மையம் அமைப்பதற்கு 4.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டயாலிசிஸ் சிகிச்சைப் பிரிவு அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போது சாத்தான்குளத்தில் மருத்துவமனைக்கு போதிய இடவசதி இல்லாமல் உள்ளது

அருகில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு சொந்தமான இடத்தில் 50 செண்ட் நிலம் கொடுத்தால் அதில் தனியாக கட்டிடம் கட்டி டயாலிசிஸ் பிரிவு அமைக்கலாம் என இங்கு உள்ள தலைமை மருத்துவர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் ஏற்கனவே வருவாய்த்துறை இடத்தில் போலீஸ் நிலையம், டிஎஸ்பி அலுவலகம், சார் நிலை கருவூலம் என பல்வேறு அலுவலகங்களுக்கு நிலம் கொடுக்கப்பட்டதால் வருவாய்த்துறை நிலம் சுருங்கிவிட்டது

எனவே அரசு ஆஸ்பத்திரிக்கு வருவாய்த்துறை இடத்தை வழங்கினால் மட்டுமே டயாலிஸ் பிரிவு தொடங்க முடியும்

நிதி ஒதுக்கியும் இட வசதி இல்லாததால் டயாலிஸ் மையம் துவங்கப்பட முடியாத நிலை உள்ளது.

எனவே அரசு டயாலிசிஸ் மையம் அமைப்பதற்கு தேவையான இடம் ஒதுக்கியும் மருத்துவர், செவிலியர், மற்றும் ஊழியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Post