வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரி வளாகத்தில் நாசரேத் வட்டம், தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் துறைகளில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க 63 வது ஆண்டு நிறைவு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு சங்கத்தலைவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரத்தினகுமார் தலைமை வகித்தார். செயலாளர் கொம்பையா ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஜான் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். துணைத் தலைவர் சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார்.
சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தங்கவேல், முன்னாள் எம்பி ஏடிகே ஜெயசீலன், மூத்த உறுப்பினர் சொர்ணமாணிக்கம், டாக்டர் சிவசைல விநாயகம், ஸ்ரீவைகுண்டம் வட்டத் தலைவர் வெங்கடாச்சாரி, கோவில்பட்டி வட்ட பொருளாளர் விஜயன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இக்கூட்டத்தில் 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பத்து விழுக்காடு ஓய்வூதியம் வழங்கவும், நாசரேத் தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அலுவலகம் அமைக்கவும், சென்னை _ நெல்லை வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்கவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக சங்க இணை செயலாளர் சார்லஸ் நன்றி கூறினார்.


